மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
|ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று காலை 8.00 மணியளவில் மினி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஸ்ரீவில்லிபுத்தூர் காந்திநகரைச் சேர்ந்த மாடசாமி (வயது 29) த/பெ. குருசாமி, வாசுராஜ் (வயது-16) த/பெ.செல்வராஜ், நிதிஷ்குமார் (வயது 17) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் சதிஸ்குமார் (வயது 20) த/பெ.கோவிந்தன் என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.