திருச்சி
திருச்சி தொழிலதிபர்களிடம் ரூ.2½ கோடி மோசடி
|பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி திருச்சி தொழிலதிபர்களிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி திருச்சி தொழிலதிபர்களிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலதிபர்
திருச்சி வயலூர் சாலை வாசன்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் பிரின்ஸ்அசரியா (வயது 32). தொழிலதிபரான இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு திருச்சி காந்தி மார்க்கெட் தையல்கார தெருவை சேர்ந்த சுரேஷ்-சரண்யா தம்பதியினர் பிரின்ஸ் அசரியாவை அணுகியுள்ளனர்.
அப்போது பங்குச்சந்தையில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதாகவும், சென்னை அசோக்நகரை சேர்ந்த முன்னாள் ஐ.டி. நிறுவன ஊழியர் மலியமான் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய பிரின்ஸ் அசரியா, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார்.
ரூ.2½ கோடி முதலீடு
அத்துடன் இதுபற்றி தனக்கு தெரிந்த தொழிலதிபர்களிடம் கூறவே, அவர்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பிரின்ஸ் அசரியா உள்பட 18 பேர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ பல தவணைகளாக வங்கி மூலமும், நேரிலும் அந்த தம்பதியிடம் முதலீடு செய்ய கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், லாபத்தொகை என்று ரூ.27 லட்சத்து 59 ஆயிரத்து 297 மட்டும் பிரின்ஸ்அசரியா வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் லாபத்தொகையையும் வழங்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி அவர்கள் கேட்ட போது அந்த தம்பதி பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
சம்பவத்தன்று தாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி பிரின்ஸ் அசரியா தரப்பினர் கேட்ட போது, அவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரின்ஸ் அசரியா உள்ளிட்டோர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், சுரேஷ், அவருடைய மனைவி சரண்யா மற்றும் மலியமான் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.