விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
|வட்டியில்லா கடன், 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி), மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதற்கிணங்க, 2023-2024-ம் ஆண்டு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 2023-2024-ம் நிதியாண்டிற்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி), மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.