திருச்சி
ஆந்திர தொழிலதிபரிடம்ரூ.14 லட்சம் காசோலை மோசடி
|ஆந்திர தொழிலதிபரிடம்ரூ.14 லட்சம் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் தெனாலி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் குர்ரா வெங்கடேஷ் (வயது 46). இவர் அந்த பகுதியில் குண்டூர் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (70) என்பவர் திருச்சி - மதுரை ரோட்டில் உள்ள கிராப்பட்டி பகுதியில் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடராஜன் குண்டூர் மிளகாய் தூள் நிறுவனத்துக்கு ஆன்லைன் மூலம் 10 டன் மிளகாய் தூள் கேட்டு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து குர்ரா வெங்கடேஷ் திருச்சி கிராப்பட்டியில் உள்ள நடராஜன் நடத்தி வரும் மகா ஏஜென்சி நிறுவனத்தில் உள்ள குடோனில் 10 டன் மிளகாய் தூளை இறக்கி உள்ளார். அதற்கு ரூ.50 ஆயிரம் முன் பணம் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகை ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்தை காசோலையாக கொடுத்துள்ளார்.
பின்னர் குர்ரா வெங்கடேஷ் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதை தொடர்ந்து குர்ரா வெங்கடேஷ் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.