திருவள்ளூர்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
|திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் நெமிலியகரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் மேல்விளாகம் காலனி அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.69 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெமிலியகரம் ஊராட்சியில் ரூ.13.69 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நெமிலியகரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானது தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதால் நெமிலியகரம் ஊராட்சிக்குட்பட்ட 8 குக்கிரமங்களில் வசிக்கும் சுமார் 3 ஆயிரம் பேர் நேரடியாகவும் 10 ஆயிரம் பேருக்கு தினசரி அடிப்படையில் பயனளிக்க கூடியதாக இந்த மேம்பாலம் அமைந்துள்ளது.
இந்த மேம்பாலத்தை 18 மாதத்திற்கு கட்டி முடிக்க துறை ரீதியாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.