வீட்டில் இருந்த படியே அதிகம் சம்பாதிக்கலாம்..! ஆசையில் பணத்தை பறிகொடுத்த இளம்பெண்..!
|திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் இணையதளம் மூலம் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.1.26 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:
சமீப காலமாக வேலையில்லாமல் வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு போலி இணையதள முகவரி மூலம் பல்வேறு குறுஞ்செய்திகள் செல்போனிற்கு வருகின்றது. இதன் மூலம் பலர் பணத்தை அதில் கட்டி ஏமாந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாயை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் எண்ணிற்கு வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை ஏற்படுத்தும் வகையில் ஒரு இணையதள முகவரியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது உள்ளது. அந்த முகவரியில் உள்ள இணைப்பை அவர் கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்து உள்ளார்.
அப்போது அதில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் கொடுக்கும் பணியை (டாஸ்க்) செய்து முடித்தபின் அந்த பணம் கூடுதல் செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து உள்ளது. இவரும் ஆர்வமாக பணம் செலுத்தி பணிகள் மேற்கொள்ள கூடுதலாக பணமும் வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பணம் செலுத்தி குறிப்பிட்ட பணிகளை செய்து உள்ளார். தொடர்ந்து அவர் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணிகள் முடித்தபின் எந்த வித பணமும் திரும்ப வரவில்லை. மேலும் அவரால் யாரையும் தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று தெரிகின்றது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண் திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.