< Back
மாநில செய்திகள்
டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

தினத்தந்தி
|
15 July 2023 1:54 PM IST

2 டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டி போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவரை கைது செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்த போது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாயாரிடம் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா விசாரித்த போது அவர் சிங்கப்பொருமாள்கோவில் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 2 பெண் டாக்டர்களிடம் இன்ஸ்பெக்டர் மகிதா விசாரித்தார். அப்போது 2 டாக்டர்களிடம் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உங்களால் டாக்டர் தொழில் செய்ய முடியாது என மிரட்டி வக்கீல் உதவிவுடன் அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் ரூ.2 லட்சம் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தவுடன் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது ரூ.10 லட்சம் கொடுத்த சிங்கப்பொருமாள்கோவில் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வரும் டாக்டர் பராசக்தி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில்:-

என்னுடைய மருத்துவ தொழிலுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக பேசி என்னிடம் ரூ.10 லட்சம் பெற்றுகொண்ட இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி, வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா மற்றும் வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு சேர்ந்த ஒரு டாக்டர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் அளித்தார். மாவட்ட கலெக்டரின் உத்தரவு படி செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம் நேற்று அரசு டாக்டர் பராசக்தி, மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்