சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்
|சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து நூதனமுறையில் கடத்தி வந்த ரூ.12 கோடி போதை மத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது நைஜீரிய நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.
அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. திடீரென அந்த வாலிபர், வயிறு வலிப்பதாக கூறினார்.
ரூ.12 கோடி போதை மாத்திரைகள்
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில் அவரது வயிற்றில் அதிகளவில் உருளை போன்ற ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இனிமா கொடுத்தனர்.
அப்போது அவரது வயிற்றில் இருந்து 71 மாத்திரைகளை எடுத்தனர். அதில் விலைஉயர்ந்த கோக்கைன் போதை பவுடரை மறைத்து வைத்து, வாயில் போட்டு விழுங்கி நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ரூ.12 கோடி மதிப்புள்ள 1 கிலோ 201 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், நைஜீரியா நாட்டு வாலிபரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.