< Back
மாநில செய்திகள்
ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
15 Sept 2023 1:01 AM IST

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பல்வேறு தரப்பினர் வரவேற்பு

இந்த நிலையில், அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கில் தமிழக அரசின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். இதுகுறித்து பெண்கள் சிலர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதி

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த சத்யா:- தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டம் வேலைக்கு செல்லும் மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் புதிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் படி ரூ.1,000 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போன் எண்ணுக்கு நேற்று மதியம் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த தொகையை உடனடியாக எடுத்து விட்டேன். அறிவித்தபடி ரூ.1,000 வழங்கிய தமிழக அரசு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த தொகை குடும்பத்தில் ஏதோ ஒரு செலவுக்கு பயன்படுத்தலாம்.

காலை உணவு திட்டம்

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சரண்யா:-

நான் மாமனார், மாமியார், கணவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன். முதலில் விண்ணப்பம் பெறப்பட்டது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. பின்னர் நேற்று முன்தினம் சோதனை அடிப்படையில் அனுப்பப்பட்ட ரூ.1 எனது வங்கி கணக்கில் வந்ததும் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. நேற்று மதியம் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி செல்போன் எண்ணுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனை அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்து மகிழ்ச்சியடைந்தேன். கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே தமிழக அரசு கொண்டு வந்த மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் என்ற திட்டமும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டமும் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்