< Back
மாநில செய்திகள்
ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்: வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
15 Sept 2023 12:18 AM IST

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்:வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பல்வேறு தரப்பினர் வரவேற்பு

இந்த நிலையில், அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கில் தமிழக அரசின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. இதற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதுகுறித்து பெண்கள் சிலர் கூறியதாவது:-

அளவில்லா மகிழ்ச்சி

வெள்ளியணை லட்சுமிபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி வினோதினி:-

தமிழக அரசு ரூ.1,000 இல்லத்தரசிகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதாக அறிவித்திருந்தது. இது என்னை போன்ற இல்லத்தரசிகளுக்கு எப்போது அந்த ஆயிரம் ரூபாய் வரும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் வங்கி கணக்குகளில் தொகை சரியாக சென்று சேர்கிறதா? என்பதை சோதனை செய்யும் வகையில் முதலில் 10 பைசா எனது வங்கி கணக்கிற்கு வந்தது.மேலும் அதற்கான விவரம் குறுஞ்செய்தியாக எனது செல்போனுக்கு வந்தது. இந்தநிலையில் நேற்றே எனது வங்கி கணக்கிற்கு மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு பல வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு நன்றி

தோகைமலை அருகே உள்ள வடசேரியை சேர்ந்த பானுப்பிரியா:- தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி 2 ஆண்டுகள் கழித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி நேற்று வந்தது. இதனை பார்த்த எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ேமலும் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

மளிகை பொருட்கள் வாங்கலாம்

லாலாபேட்டை பிள்ளப்பாளையத்தை சேர்ந்த கோமதி:-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை எனது வீட்டின் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். மேலும் குழந்தைகளின் கல்வி செலவிற்கும், மருத்துவ செலவிற்கும் பயன்பெறும். இந்த திட்டம் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளதாகவே உள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பயனுள்ளதாக இருக்கும்

க.பரமத்தி அருகே உள்ள கருங்குட்டையை சேர்ந்த எஸ்.குப்பாத்தாள்:-நான் டெக்ஸ் பார்க்கில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எனக்கு கிடைத்தது, எனது குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டு செலவிற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும், இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் வாழ்க்கையில் எனக்கு ஒரு தனி தன்னம்பிக்கை பிறந்துள்ளது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

குடும்ப செலவுக்கு உதவும்

குளித்தலை அருகே உள்ள வை.புதூர் கிராமத்தை சேர்ந்த கனிமொழி மோகனசுந்தரம்:-மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்திருந்தேன். கடந்த 12-ந்தேதி எனது வங்கிக் கணக்கில் தமிழக அரசு சார்பில் ரூ.1 போடப்பட்டது. தற்போது ரூ.1,000 செலுத்தப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகளிர் உரிமை தொகையானது எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகளின் கல்வி செலவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மகளிர் உரிமைத்தொகை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலை தொகுதி மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்