பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை,
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தொகையை மாதந்தோறும் வழங்குவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும்? என்று தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. மக்களும் இந்த திட்டம் குறித்து அதிக ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சட்டசபையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டில், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் விளக்கம்
மாதம் ஆயிரம் ரூபாயைப் பெற தகுதியுள்ள பெண்கள் யார்? யார்? என்ற கேள்வியையும், என்னென்ன தகுதிகளை அரசு நிர்ணயித்துள்ளது? என்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், 'வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குவதன் மூலம் அவர்களின் வறுமை நிலை மாறி, சுயமரியாதையுடன் வாழ முடியும்.
அந்த வகையில், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் 1 கோடி பெண்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆலோசனை
இந்த நிலையில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பு, ஆண்டு வருமானம், பணம் செலுத்தும் முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துவது ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.