மதுரை மாநகராட்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் கே.என்.நேரு
|மதுரை மாநகராட்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நகர்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்ஷிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்.பி.க்கள் கார்த்திக் சிதம்பரம், வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், தமிழரசி, மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களது தங்களது பகுதி பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி 2022 - 2023 நிதியாண்டில் குடிநீர் விநியோக திட்டப்பணிகளுக்கு ரூ.358 கோடி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.12.98 கோடி, மின் தகன மேடை அமைப்பதற்கு ரூ.5 கோடி, விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரூ.500 கோடி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி கோருதல், திட்ட வரைவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 165 எம்.எல்.டி தேவை. தற்போது மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தினந்தோறும் 156 எம்.எல்.டி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் 100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவைக்கேற்ப சாலை மேம்பாட்டு பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடிநீர் திட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ 73.03 கோடி மதிப்பீட்டிலான பணிகளில் 86 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆனையூர் பகுதிக்கு ரூ 8.97 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிகளில் 96 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையூர் கானாடுகாத்தான் , பள்ளத்துர் , கண்டனுர் , புதுவயல் , நாட்டரசன்கோட்டை , மானாமதுரை பேரூராட்சிகள் , 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2452 ஊரக குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை , காரைக்குடி மற்றும் தேவகோட்டை நகராட்சிகளுக்கு மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 1752.73 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 59 சதவீதம் முடிந்துள்ளது. அதன்மூலம் 86.42 எம்.எல்.டி குடிநீர் கிடைக்கும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு ரூ 140.13 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தில் 96 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளன.
மதுரை மாவட்டம் , ஆண்டிப்பட்டி சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறு கட்டமைப்பு செய்து டி.கல்லுப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 236 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ 240.45 கோடி மதிப்பீட்டில் 1.74 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையை நீராதாரமாக கொண்டு கூடுதலாக குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலூர் , கொட்டாம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 88 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ 127.18 கோடி மதிப்பீட்டில் 1.31 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் காவேரி ஆற்றை நீராதாரமாக கொண்டு கூடுதலாக குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் , கள்ளிக்குடி , திருமங்கலம் , செல்லம்பட்டி , உசிலம்பட்டி , அலங்காநல்லூர் , வாடிப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியங்களைச் சார்ந்த 867 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ 1655.46 கோடி மதிப்பீட்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 776 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.360 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.