புதையலில் கிடைத்த தங்கம்... ஆசை வார்த்தையை நம்பிய மளிகை வியாபாரி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
|புதையல் கிடைத்தது என்றுக்கூறி போலி நகையை கொடுத்து மளிகை கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48), மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் அடிக்கடி மளிகை பொருட்கள் வாங்கி வந்தார். அவர் தனது நண்பருடன் சதாசிவத்திடம் சென்று நாங்கள் 2 பேரும் இங்கு வீடு எடுத்து தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறோம்.
மேலும் விடுமுறை நாட்களில் நாங்கள் கூலி வேலைக்கு செல்வது உண்டு. அப்படி ஒருநாள் வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டும் வேலை செய்தோம். அப்போது அங்கு 1 கிலோ தங்க நகை கிடைத்தது. உடனே நாங்கள் 2 பேரும் யாருக்கும் தெரியாமல் அதை எடுத்து ஒழித்து வைத்து கொண்டு வந்தோம். அந்த நகை கிடைத்தது வீட்டின் உரிமையாளருக்கு கூட தெரியாது.
எனவே இந்த நகையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். ஆனால் எங்களுக்கு தற்போது, கல்லூரி கட்டணம் செலுத்த அவசரமாக பணம் தேவைப்படுவதால் அந்த புதையல் நகையை ரூ.10 லட்சத்துக்கு விற்கிறோம், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு உள்ளனர். அதற்கு சதாசிவம் ஒரு வாரம் கழித்து வாருங்கள், பணத்தை தயார் செய்துவிட்டு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
மேலும் இது தங்க நகைதான் என்று நான் எப்படி நம்புவது என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள், தாங்கள் கையில் வைத்திருந்த நகையில் சிறிய பகுதியை கழற்றி சதாசிவத்திடம் கொடுத்துவிட்டு சென்றனர். அதை அவர் பரிசோதித்தபோது தங்கம்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரூ.10 லட்சத்தை தயாராக வைத்திருந்தார்.
பின்னர் ஒரு வாரம் சென்றதும், அந்த இளைஞர்கள் 2 பேர் சதாசிவத்திடம் வந்து 1 கிலோ நகையை கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், ரூ.10 லட்சத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய இளைஞர்கள் இதை யாரிடமும் சொல்லாதீர்கள், புதையலாக கிடைத்தது என்பதால் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தால் வாங்கிச்சென்றுவிடுவார்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
ரூ.10 லட்சத்துக்கு 1 கிலோ தங்க நகை வாங்கிவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்த அவர், அதை பரிசோதனை செய்தபோது அவை பித்தளை நகை என்பதும், அந்த இளைஞர்கள் போலி நகையை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சதாசிவம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர் கருமத்தம்பட்டி போலீசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், சதாசிவத்திடம் மோசடி செய்துவிட்டு தப்பி -ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.