திருவள்ளூர்
பெட்ரோல் பங்கில் புகுந்து ரூ.1¼ லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
|பெரியபாளையம் அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1¼ லட்சத்தை திருடிச்சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பெரிய காலனியில் தாமரைபாக்கம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தொழிலதிபருமானவர் இ.கே.கோதண்டன் என்பவருக்கு சொந்தமான இந்த பெட்ரோல் பங்கில் மேலாளராக தனசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் ஊழியர்கள் உள்பட 3 பேர் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், பெட்ரோல் பங்கில் விற்பனையான தொகையில் ரூ.1.25 லட்சத்தை நேற்று காலை வங்கியில் செலுத்துவதற்காக அதனைத் தனியாக கல்லாவில் வைத்து பூட்டிவிட்டு அன்று இரவு 11.30 மணிக்கு 3 பேரும் பெட்ரோல் பங்கில் உள்ள அலுவலக அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, நள்ளிரவில் அறையின் கதவை மர்மநபர்கள் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து கல்லாவில் இருந்த ரூ.1.25 லட்சம் மற்றும் சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் தனசேகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பெரியபாளையம், பெரியபாளையம் பஜார், பெரியபாளையம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு கடைகள், வீடுகளில் கொள்ளைச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.