< Back
மாநில செய்திகள்
வெங்காயம் வாங்கி பணம் தராமல் ரூ.10 லட்சம் மோசடி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வெங்காயம் வாங்கி பணம் தராமல் ரூ.10 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
23 Jun 2023 11:34 PM IST

வாணியம்பாடியில் வெங்காயம் வாங்கிய தந்தை-மகன் ரூ.10 லட்சம் தராமல் மோசடி செய்ததாக அவர்கள் மீது மராட்டிய வியாபாரி புகார் அளித்துள்ளார்.

வெங்காய வியாபாரம்

மராட்டிய மாநிலம் அகமத் நகரை சேர்ந்தவர் அப்துல் பி தன்பூரி. வெங்காய விவசாயியான இவர் வியாபாரமும் செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வந்த இவர் நகர போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

வாணியம்பாடி நகரம், காதர்பேட்டை - ஊசி தெருவை சேர்ந்த குண்டு முகமது ஈசாக் (வயது 27) மற்றும் அவரது தந்தை குண்டு முகமது அஷ்வாக் (58) ஆகியோர் வெங்காய வியாபாரம் செய்வதாக என்னுடன் தொடர்பு கொண்டு கூறினார்கள். அதனால் நான் வாணியம்பாடிக்கு வந்து வியாபாரம் நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது 3 லோடு வெங்காயம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன் பேரில் முதலில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 25 ஆயிரத்து 980 கிலோ வெங்காயம் அனுப்பினேன். அதற்குரிய பணத்தை குண்டு முகமது ஈசாக் அனுப்பி வைத்தார். அவர் மிகவும் நம்பிக்கையோடு பணத்தை அனுப்பியதால் நான் அதை நம்பி இரண்டாவது முறையாக 30,980 கிலோ எடையுள்ள வெங்காயத்தை அனுப்பி வைத்தேன். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 15 ஆயிரம்.

பின்னர் மூன்றாவது லோடு அனுப்புமாறும் அதை அனுப்பி வைத்தால் மொத்தமாக பில் தொகையை அனுப்பி விடுவதாக கூறினார்கள், அதை நான் நம்பி மீண்டும் 30 ஆயிரம் கிலோ வெங்காயத்தை அனுப்பினேன்.

ஆனால் வெங்காயத்தை வாங்கிய அவர்கள் 20 நாட்களாகியும் எனக்கு சேர வேண்டிய மொத்த தொகை ரூ.10 லட்சம் தராமல் ஏமாற்றி வந்தனர். நான் அவர்களுடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ரவுடிகள் துணையுடன் மிரட்டல்

எனவே நான் குண்டு முகமது ஈசாக் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தை கேட்டேன், அப்போது ரவுடிகள் துணையோடு அவரும், அவரது தந்தை முகமது அஷ்வாக் ஆகியோரும் பணம் கேட்டால் கொன்று விடுவோம், இங்கிருந்து போய் விடுங்கள் என மிரட்டினார்கள்.

இவர்கள் எங்களிடம் மட்டுமில்லாமல் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பல வியாபாரிகளிடமும் இதுபோன்று வெங்காயத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியது விசாரித்த போது தெரியவந்தது. எனவே இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தரும்படியும், எங்களை மிரட்டிய ரவுடி கும்பல் மீதும் நடவடிக்கை எடுகக வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

புகாரின்பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் அளித்துள்ளனர். அதன்பேரிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்