< Back
மாநில செய்திகள்
ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கு: பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கத்தை ரத்துசெய்ய முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கு: பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கத்தை ரத்துசெய்ய முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
1 July 2023 12:44 AM IST

ரூ.10 லட்சம் பறித்ததாக பதிவான வழக்கில் பெண் இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து நீக்கியதை ரத்துசெய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி கைதானார். பின்னர் அவர் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், தன்னை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் இன்ஸ்பெக்டர் பணி வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் தனக்கான பணி நீக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக தனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை, எனவே என்னை பணி நீக்கம் செய்தது சட்டவிரோதம். அந்த உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரத்து செய்ய முடியாது

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆஜராகியிருந்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மீதான புகார்களின் அடிப்படையில் அவர் மீது 2 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, போலீஸ் உயர் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கையை எடுத்து, மனுதாரரை பணி நீக்கம் செய்து உள்ளனர். எனவே மனுதாரரை பணி நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்