சென்னை
அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி - வாலிபர் கைது
|அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், பர்மா காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 32). இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், காசான்பட்டியைச் சேர்ந்த அர்ஜூன் பாண்டி (27) என்பவர் முகநூல் மூலம் அறிமுகம் ஆனார்.
அப்போது அவர், தனக்கு அறநிலையத்துறையில் உயர் அதிகாரிகளை தெரியும். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக குமரேசனிடம் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தான் ஏற்கனவே இதுபோல் சிலருக்கு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாகவும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை குமரேசனுக்கு, அர்ஜூன் பாண்டி அனுப்பியதாக தெரிகிறது. அதை உண்மை என்று நம்பிய குமரேசன், சிறிது சிறிதாக கூகுள்-பே மற்றும் வங்கி கணக்கு மூலம் ரூ.1.69 லட்சம் வரை அர்ஜூன் பாண்டிக்கு அனுப்பினார். பணத்தை வாங்கிய அர்ஜூன் பாண்டி, அதன்பிறகு குமரேசனின் செல்போன் அழைப்பை ஏற்க மறுத்தார். சொன்னபடி வேலையும் வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்தார்.
இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்ட குமரேசனை, அர்ஜூன் பாண்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி குமரேசன் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லில் இருந்த அர்ஜூன் பாண்டியை கைது செய்து, தாம்பரம் அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.