< Back
மாநில செய்திகள்
4 ஆயிரம் டன் பழைய இரும்பு வழங்குவதாக கூறி ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு
திருச்சி
மாநில செய்திகள்

4 ஆயிரம் டன் பழைய இரும்பு வழங்குவதாக கூறி ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
1 Jun 2022 9:45 PM GMT

4 ஆயிரம் டன் பழைய இரும்பு வழங்குவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 ஆயிரம் டன் பழைய இரும்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர், உரிமம் பெற்று பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியை சேர்ந்த சீனிவாசன், பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஆகியோரிடம் ஒரு கிலோ ரூ.21 வீதம் மொத்தம் 4 ஆயிரம் டன் பழைய இரும்பை பெற்றுக்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் முன்பணமாக ரூ.3 கோடி பேசி வைப்புத்தொகையாக ரூ.1 கோடியும், மீதம் உள்ள ரூ.2 கோடிக்கு நாள் ஒன்றுக்கு 300 டன் வீதம் பழைய இரும்பை பெற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி நாள் ஒன்றுக்கு 300 டன் பழைய இரும்பை கொடுக்காமல், 20 டன் முதல் 30 டன் வரை மட்டுமே வழங்கியதாக தெரிகிறது.

ரூ.1 கோடி மோசடி

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி வரை சுமார் 840 டன் பழைய இரும்பு மட்டுமே வழங்கினர். மீதம் உள்ள 3,160 டன் இரும்பை வழங்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி வேறு ஒரு நபருக்கு இரும்பை விற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. குமரேசன் கொடுத்த ரூ.1 கோடி முன்பணத்தையும் அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் குமரேசன் புகார் செய்தார். அதன்பேரில், சீனிவாசன், பிரசாந்த் ஆகியோர் மீது மோசடி செய்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்