திருநெல்வேலி
ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி 100 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி
|ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, 100 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நெல்லை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை ரஹமத் நகரைச் சேர்ந்தவர் ஆலன் செல்வடெனிஸ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியரான இவரது செல்போனுக்கு பகுதிநேர வேலை தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை உண்மை என்று நம்பிய ஆலன் செல்வடெனிஸ், அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணுக்கு யு.பி.ஐ. ஐ.டி. மூலம் ரூ.5.59 லட்சத்தை செலுத்தினார். பின்னர் அவருக்கு லாபமும் கிடைக்கவில்லை. அவர் செலுத்திய பணமும் திருப்பி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஆலன் செல்வடேனிஸ், இதுகுறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ''தற்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பலரை ஏமாற்றி வருகிறார்கள். மோசடி நபர்கள் ஆன்லைனில் பகுதிநேர வேலை என்று கூறி வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அதனை நம்பி, அதில் இணைந்து, அவர்கள் தெரிவிக்கும் வீடியோ, புகைப்படங்களுக்கு லைக்குகள் செய்தும், ஷேர் செய்தும் ஸ்கிரீன் ஷாட் எடுத்தும் அனுப்ப சொல்வார்கள். அப்படி செய்யும்போது ஒரு படத்திற்கு இவ்வளவு தொகை என குறிப்பிட்ட பணத்தை அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்புவார்கள்.
அடுத்தகட்டமாக ஆன்லைனில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இதனை நம்பி பலரும் பணத்தை செலுத்தி ஏமாந்து விடுகின்றனர். இதுபோன்று நெல்லை மாநகரில் மட்டும் கடந்த 8 மாதங்களில் சுமார் 100 புகார்கள் வந்துள்ளன. இந்த மோசடி சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்துள்ளன. இதன்மூலம் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதில் பொதுமக்கள் சிக்கி தங்கள் பணத்தை இழந்து விடக்கூடாது. இதுதொடர்பாக பள்ளி, கல்லூரிகள், ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.