< Back
மாநில செய்திகள்
தகுதியில்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி ரூ.1½ கோடி மோசடி:வங்கி மேலாளர் உள்பட 15 பேருக்கு சிறை - மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
மதுரை
மாநில செய்திகள்

தகுதியில்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி ரூ.1½ கோடி மோசடி:வங்கி மேலாளர் உள்பட 15 பேருக்கு சிறை - மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 1:55 AM IST

தகுதியில்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 15 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.


தகுதியில்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 15 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடன் வழங்கி மோசடி

தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் திண்டுக்கல் மாவட்ட தலைமை வங்கியின் மேலாளராக 2010-ம் ஆண்டில் குணசீலன் என்பவர் பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் தனது வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்களாக இருந்த சிலருக்கு வீட்டுக்கடன் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த கடன் பெற தகுதியில்லாதவர்கள் என்றும் இதுதொடர்பாக ரூ.1 கோடியே 55 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும் வங்கி மேலாளர் குணசீலன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் குணசீலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், தகுதியின்றி கடன் பெற்றவர்கள் என மொத்தம் 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயன் ஆஜரானார்.

15 பேருக்கு சிறை

விசாரணை முடிவில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து வங்கி மேலாளர் குணசீலனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த பால் ஜான்சன், குமரேசன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரமும், ஜேசுவின் பெபி என்ற பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், மகாலிங்கம், ஆறுமுகம், ராஜா தாமஸ், முரளி, திருப்பதி, தங்கராஜன், வடமலை, ஜேசுராஜ், ஷாரூன் ரஷித், தேரடி முத்து, சுந்தரேசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்