சென்னை
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
|போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.1½ கோடி போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
போதை பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதைப்பொருட்களை விசாரணை முடிந்தவுடன் எரித்து அழிப்பதற்கு கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி 68 வழக்குகளில் சிக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் உள்பட போதைப்பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ரசாயன பொருட்களை எரிக்கும் மையத்தில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் 57 வழக்குகளில் சிக்கிய 831 கிலோ கஞ்சா, 14.83 கிலோ கெட்டமைன் என ரூ.1½ கோடி மதிப்பிலான 845.83 கிலோ போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் இந்த மையத்தில் நேற்று அழிக்கப்பட்டது.
பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாதங்களில் 519 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,000 கிலோவுக்கு மேற்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 90 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாகவும, ரெயில் மார்க்கமாகவும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதை தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் முற்றிலும் குறைப்பதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சோதனைகள் அதிகரித்திருப்பதால் போதைப் பொருட்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யாபாரதி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜி.நாகஜோதி உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.