காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை - கலெக்டர் தகவல்
|காஞ்சீபுரம் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் காஞ்சீபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, நடத்திய முதலாவது புத்தக திருவிழா நடைபெற்றது. இதற்கான நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் கலெக்டர் ஆர்த்தி பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, 53 துறை சார்ந்த வல்லுனர்களின் அயராத உழைப்பால் 104 புத்தக அரங்குகள், கோளரங்கம், மற்றும் பள்ளி கல்லூரிகளின் கலை நிகழ்ச்சிகள், பல வகை போட்டிகள் போன்றவை காஞ்சீபுரம்புத்தக கண்காட்சியை மெருகூட்ட செய்தன.
2022 டிசம்பர் 23 தொடங்கி 2023 ஜனவரி 2 வரை காஞ்சீபுரத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்ததோடு மட்டுமல்லாமல், மாலை வேளைகளில் பேசிய சிறப்பு பேச்சாளர்களின் சீரிய உரை நம் செவிக்கு விருந்தளித்தது என்றால் அது மிகையல்ல.
சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சொன்ன ஒருமித்த கருத்து என்னவெனில் இதற்கு முன் வெவ்வேறு மாவட்டங்களில் அவர்கள் உரை நிகழ்த்திய புத்தக திருவிழாவில் வந்திருந்த கூட்டத்தை விட எண்ணில் அடங்கா கூட்டம் காஞ்சீபுரத்தில் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது. காஞ்சீபுரம் நகர மக்கள் புத்தகத்தின் மீது கொண்ட நேசத்தையும் அவர்களது இலக்கிய தாகத்தையும் உணர முடிந்ததாக கூறியது காஞ்சீபுரம் நகரின் பெருமைக்கு ஒரு சான்றுதானே.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தக திருவிழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு, 80 ஆயிரம் புத்தகங்கள் ரூ.1 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய குழுத்தலைவர்கள், நன்கொடை வழங்கிய 43 நன்கொடையாளர்களுக்கு புத்தக திருவிழா நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.