< Back
மாநில செய்திகள்
ஓட, ஓட விரட்டி ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்
மாநில செய்திகள்

ஓட, ஓட விரட்டி ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்

தினத்தந்தி
|
21 May 2024 1:22 AM GMT

தீபக்ராஜா மீது 4 கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி. இவருடைய மகன் தீபக் ராஜா (வயது 30). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தார்.

அங்கு அவர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலுக்கு வெளியே வந்தார். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முககவசம் அணிந்து பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் அவரை நோக்கி ஓடி வந்தது. இதை பார்த்த அவர் மீண்டும் ஓட்டலுக்குள் ஓடி வர முயன்றார்.

ஆனால் அவரை ஓட, ஓட விரட்டிச் சென்ற மர்மகும்பல் கண் இமைக்கும் நேரத்தில் தீபக் ராஜாவின் முகத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி சிதைத்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவர்கள் அங்கு நிறுத்தி இருந்த காரில் ஏறி தப்பிச்சென்றனர். இதில் தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்தவர்கள், இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். தீபக் ராஜா உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்த தரப்பை சேர்ந்தவர்கள் தீபக் ராஜாவை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தீபக்ராஜா மீது 4 கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்ததாகவும், பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீபக்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச்சென்ற 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தீபக் ராஜா படுகொலை செய்யப்படும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நெல்லையில் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்