< Back
மாநில செய்திகள்
செங்குன்றம் அருகே ரவுடி வெட்டிக்கொலை - குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்
சென்னை
மாநில செய்திகள்

செங்குன்றம் அருகே ரவுடி வெட்டிக்கொலை - குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
9 Aug 2022 4:18 PM IST

செங்குன்றம் அருகே குடிபோதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(வயது 24). ரவுடியான இவர் மீது செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று அதிகாலை ரமேஷ், தனது நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8-வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்த வினோத் என்ற உருளை வினோத்(22), ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(20) ஆகியோருடன் ஆட்டந்தாங்கல் பஜனை கோவில் தெரு ஏரிக்கரை ஓரம் அமர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறியதும், நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரோந்து போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரமேசை, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து வீரா, விஜய், வெங்கட் ஆகிய 3 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் அரவிந்தன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்