சென்னை
கவர்னர் மாளிகை முன் போலீசார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்
|கவர்னர் மாளிகை முன் தன்னை பிடிக்க வந்த போலீசார் மீதும் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1-வது நுழைவுவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டை வீசிய ரவுடி கருக்கா வினோத் (வயது 42) பிடிபட்டார். அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கவர்னர் மாளிகை தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் ரவுடி கருக்கா மீது இந்த வழக்கு பாயவில்லை. அவர் மீது 436 (பொது கட்டிடத்துக்கு தீ வைத்து சேதப்படுத்த முயற்சிப்பது), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது), 506 (2) (கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது), வெடிபொருள் தடுப்பு சட்டம் பிரிவு 3 (வெடிபொருட்களை பயன்படுத்தி ஒருவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது சொத்தை சேதப்படுத்துவது), 4 (பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது) ஆகிய 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் இரவோடு, இரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவுடி கருக்கா வினோத் கவர்னர் மாளிகை முன்பு ஒரு பெட்ரோல் குண்டை மட்டும் வீசியதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கிண்டி ராஜ்பவன் அலுவலகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரவுடி கருக்கா வினோத்தை பிடித்தது கவர்னர் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி ரோந்து போலீஸ்காரர் மோகன் ஆவார்.
முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள போலீஸ்காரர் மோகன் கூறிய தகவல்கள் வருமாறு:-
கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி கிண்டி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் நானும், டிரைவர் சில்வானு ஆகிய 2 பேரும் ஈடுபட்டிருந்தோம். மதியம் 2.40 மணியளவில் கவர்னர் மாளிகை அருகே பாதுகாப்பு அலுவலில் இருந்தோம். கவர்னர் மாளிகையில் உள்ள பிரதான நுழைவு வாயிலின் நேர் எதிர்புறம் உள்ள நடைபாதையில் இருந்து ரவுடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசினார்.
இதில் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் சரியாக கவர்னர் மாளிகையின் 1-வது பிரதான நுழைவு வாயில் முன் வந்து தடுப்பு கம்பி அருகே பலத்த சத்தத்துடன் நாங்கள் பணியில் இருந்த இடத்துக்கு அருகே வந்து விழுந்தது. தீப்பற்றி எரிந்தது. உடனே நானும், என்னுடன் பணியில் இருந்தவர்களும் அவரை பிடிப்பதற்காக நேர் எதிர்புறம் ஓடியபோது, அந்த நேரத்தில் மேலும் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீப்பற்ற வைத்து மீண்டும் எங்களை நோக்கி வீசினார். அந்த பாட்டில் முன்பு விழுந்த இடத்துக்கு அருகே பூந்தோட்டம் அமைந்துள்ள தடுப்பு சுவர் மீது விழுந்தது.
பின்னர், நானும், சில போலீசாரும், போக்குவரத்து போலீசார் ஒருவரும் சேர்ந்து அந்த நபரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது, 'என்னை பிடிக்க வந்தீர்கள் என்றால், உங்கள் மீதும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்' என்று மிரட்டினார்.
இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.