< Back
மாநில செய்திகள்
இலங்கை தமிழர் முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் ரவுடி கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இலங்கை தமிழர் முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் ரவுடி கைது

தினத்தந்தி
|
15 March 2023 1:08 PM IST

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. முகாமையொட்டி மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையின் சுவர் ஏறி உள்ளே குதித்து, நேற்று முன்தினம் முகாமை சேர்ந்த சிலர் திருட முயன்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர் முத்து (வயது 55) என்பவர் தாக்கப்பட்டார்.

தகவலறிந்து இலங்கை தமிழர் முகாமிற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான முகாமைச்சேர்ந்த பழைய குற்றவாளி ராபின்சன் (38) என்பவரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் என்பவரையும், தனிப்பிரிவு போலீஸ் ராமதாஸ் என்பவரையும் உடைந்த பீர்பாட்டிலால் தாக்க முற்பட்டார்.

ஒரு கட்டத்தில் கொலை செய்யும் நோக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேசை மட்டும் குறிவைத்து உடைந்த பீர் பாட்டிலால் பலமுறை அவரை குத்த ராபின்சன் முயன்றதாக தெரிகிறது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிர் தப்பித்தார். பின்னர் போலீசாரை சமாளிக்க முடியாத ராபின்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவான ராபின்சன்னை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இருந்து ஆந்திராவிற்கு தப்பி செல்ல முயன்ற ராபின்சனை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்