"ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ.." பாடல் புகழ் இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை
|மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை ரவி ஷங்கர் இயக்கி இருந்தார்.
சென்னை,
மனோஜ் பாரதிராஜா மற்றும் குணால் நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியவர் ரவி ஷங்கர் (63). இந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் அவரே எழுதி இருந்தார்.
இயக்குனர் பாக்யராஜ் மற்றும் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி ஷங்கர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் வருஷமெல்லாம் வசந்தம். அந்த படம் மனோஜ் பாரதிராஜா மற்றும் குணால் நடிப்பில் வெளியாகி இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் பாடலாசிரியர் அவரே. அதில் எல்லா பாடல்களும் ஹிட் ரகம். குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற 'எங்கே அந்த வெண்ணிலா..? என்ற பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
அதுமட்டுமின்றி விக்ரமன் இயக்கிய 'சூரியவம்சம்' படத்தில் இடம்பெற்ற கிளாசிக் பாடலான 'ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ..' பாடலை எழுதியவரும் ரவி ஷங்கர் தான். வருஷமெல்லாம் வசந்தம் படத்துக்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் ரவி ஷங்கர் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது அறையில் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனிமை மற்றும் மன உளைச்சல் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.