< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்

தினத்தந்தி
|
29 May 2024 2:57 PM IST

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்வதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோப்கார் பராமரிப்பு பணியை முன்னிட்டு, தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை(வியாழக்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்