மெரினா-பெசன்ட் நகர் இடையே 'ரோப் கார்' மத்திய அரசு தகவல்
|மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.60 கி.மீ. நீளத்தில் ‘ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு 'ரோப் கார்' பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.60 கி.மீ. நீளத்தில் 'ரோப் கார்' திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழகம் உள்பட மற்ற சில மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 10 இடங்களில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு தற்போது மத்திய அரசு சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் கோரியுள்ளது. அதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் 24 மாதங்களுக்குள் ஆய்வு செய்து, சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த ரோப் கார் திட்டம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர் வழியாக பெசன்ட்நகர் வரை கடற்கரையை ஒட்டியே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.