சிவகங்கை
அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்
|திருப்பத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
திறப்பு விழா
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தன்னார்வலர் பங்களிப்புடன் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
கூடுதல் கட்டிடங்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கால சந்ததியினர்களாக உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவது மட்டுமல்லாமல் சிறப்பான முறையில் மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார் வலர்கள் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி கிராமப் புறங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்து வருகின்றனர். அதன்படி திருப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் தளவாட பொருட்கள் ஆகியவற்றை தன்னார்வலர் சின்னையா வழங்கினார்.
உறுதுணை
இதுபோன்று இன்னும் பல பணிகளை கிராமத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்பாடு வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தன்னார்வலர்கள் முன்வந்து அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருப்பத்தூர் யூனியன் தலைவர் சண்முகவடிவேல், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.