செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்..!
|செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த பகுதியில், ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்த அனுமந்தபுரம் பகுதியில், ராக்கெட் லாஞ்சர்கள் கேட்பாரற்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் இந்திய ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வந்தது. இந்த ராணுவ பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை சோதனை செய்யும் பயிற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த பயிற்சி முகாம் செயல்பாட்டில் இல்லாத சூழலில் அங்கு உள்ள மலைப்பகுதியில் 3 ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பகுதியில் மாடு மேய்க்கும் நபர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்டதில் அங்கு 3 ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ராக்கெட் லாஞ்சர்கள் இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி அதிகாரிகள் இந்த பகுதியில் சோதனை செய்து ராக்கெட் லாஞ்சர்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.