திருவள்ளூர்
முகத்தில் மயக்க 'ஸ்பிரே' அடித்து ஆசிரியரிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
|திருவள்ளூர் அருகே ஆசிரியர் முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.
திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே உள்ள வங்கியில் பணத்தை எடுக்க சென்றார். வங்கியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்து மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைத்து கொண்டு காக்களூர் நெஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென பஞ்சர் ஆனது. அந்த பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு மோட்டார் சைக்கிளை பூமிநாதன் கொண்டு சென்றார்.
பணத்துடன் பூமிநாதன் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர் அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் அவரை பின்தொடர்ந்தனர். பஞ்சர் கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பூமிநாதன் முகத்தில் மயக்க ஸ்பிரேயை அடித்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்து பூமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.