திருவண்ணாமலை
மாந்திரீகம் செய்வதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகை- பணம் கொள்ளை
|ஆரணி அருகே கணவரின் நோயை மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகை பணத்தை கொள்ளையடித்து தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி
ஆரணி அருகே கணவரின் நோயை மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்து பெண்ணிடம் நகை பணத்தை கொள்ளையடித்து தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பம்
ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் கட்டிட மேஸ்திரி ஆக உள்ளார்.
சந்திரனுக்கு மனநலம் பாதிப்புஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பகலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஓர் வாலிபர் குடுகுடுப்பைக்காரர் போல வந்திருந்தார். அந்த நபர், '' உன் கணவர் பெயர் சந்திரன். அவர் மனநலம் பாதித்துள்ளார். உங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் உங்களுடன் இருந்து வருகிறார் என சொல்லவே அமுதாவும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
இரட்டிப்பு ஆசை
அப்போது உனது கணவரை நல்ல நிலையில் குணப்படுத்துவேன். அதற்கு சிறிது பணம் செலவாகும் உன்னிடம் எவ்வளவு நகை பணம் உள்ளது என கேட்டுள்ளார். அதனை கொடு நான் இரட்டிப்பாக தருகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.
இதனால் தன் கணவன் நலமாக வேண்டும் நான் கொடுக்கும் பணம் இரட்டிப்பாகும் என்ற அற்புத ஆசையால் தன்னிடம் இருந்த 6 ½ சவரன் தங்க நகைகளையும் ரூ.3 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மர்ம ஆசாமி ஒரு மையை அமுதா நெத்தியில் வைத்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
சுயநினைவு அடைந்த அமுதா எழுந்து பார்க்கும் போது தன்னிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து அவரை தேடினார். ஆனால் அந்த நபர் தப்பிச்சென்று விட்டார்.
புகார்
இது குறித்து அவர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அமுதாவிடம் மர்மநபரின் அடையாளங்கள் குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.