கடலூர்
கடலூர் செல்வ விநாயகர் கோவிலில் கொள்ளை முயற்சி
|கடலூர் செல்வ விநாயகர் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிசாலையில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இதில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நுழைவு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த கோவில் உண்டியல் பூட்டை உடைத்தனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலித்ததால், அங்கிருந்து தப்பி ஓடினர்.
அலாரம் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி தலை மறைவாகி விட்டனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். மஞ்சக்குப்பம் நகர மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலில் கொள்ளையடிப்பதற்காக உண்டியலை உடைக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.