சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளை - வங்கி ஊழியரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்
|வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் இன்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து மக்களிடையே தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியில் தங்கள் நகை, பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.