கிருஷ்ணகிரி
பர்கூர் அருகே துணிகரம்:டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளைமுகமூடி அணிந்து வந்த கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|பர்கூர்:
பர்கூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டாஸ்மாக் கடை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தபால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக மாதேஷ் (வயது 48) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடி விட்டு வசூலான பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மாதேஷ் கழுத்தில் வைத்து மிரட்டினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்தனர்.
ரூ.4 லட்சம் கொள்ளை
இதையடுத்து முகமூடி கொள்ளையர்கள் டாஸ்மாக் விற்பனை தொகை ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 610, உயர்தர மதுவகைகள் மற்றும் மாதேசின் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மாதேசை டாஸ்மாக் கடையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
இந்த நிலையில் கடைக்குள் இருந்த மாதேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கடையை திறந்து மாதேசை வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து மாதேஷ் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 5 முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
======