விருதுநகர்
வங்கி அதிகாரி வீடு உள்பட 5 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை
|ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டை உடைத்து வங்கி அதிகாரி வீடு உள்பட 5 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். இதில் 2 வீடுகளில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டை உடைத்து வங்கி அதிகாரி வீடு உள்பட 5 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். இதில் 2 வீடுகளில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வங்கி அதிகாரி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரைச் சேர்ந்தவர் கயத்தம்மாள். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வங்கியில் அதிகாரியாக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மருத்துவ பரிசோதனைக்காக மதுரைக்கு சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
மற்றொரு வீடு
இந்த வீட்டுக்கு அருகே சதீஷ் என்பவரது வீடு உள்ளது. அவர் வெளியூர் சென்று இருந்தார். அவரது வீட்டிலும் நகை மற்றும் பணம் கொள்ளை போனது.
மேலும் இப்பகுதியில் பூட்டி கிடந்த 3 வீடுகளில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
15 பவுன் நகை கொள்ளை
விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வங்கி அதிகாரி கயத்தம்மாள் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளும், சதீஷ் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நிதி நிறுவனத்தை உடைத்துரூ.3 லட்சம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை உடைத்து, அதில் இருந்து ரூ.3 லட்சத்தை கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.