தர்மபுரி
அரூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
|அரூர்:
அரூர் அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி, தாதரவலசை மற்றும் புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அருகே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து பொதுமக்கள் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி தாதரவலசை பகுதியில் அரூர்- சித்தேரி சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.