நாமக்கல்
திருச்செங்கோடு அருகே சாக்கடை கால்வாய் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|திருச்செங்கோடு அருகே சாக்கடை கால்வாய் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டை அடுத்த குமரமங்கலம் பகுதியில் இருந்து சத்திநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் மண்டகபாளையம், 87 கவுண்டம்பாளையம் என 3 ஊராட்சி பகுதி சந்திக்கும் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது.
இந்த சாக்கடை கால்வாயில் பல ஆண்டுகளாக கழிவநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று 3 ஊராட்சி பகுதி சந்திக்கும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தேங்கி உள்ள கழிவுநீரை வெளியேற்றவும், சாக்கடை கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.