தர்மபுரி
அரூரில்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழப்புஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
|அரூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்:
அரூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சூரப்பட்டியை சேர்ந்தவர் கிரி (வயது 21). பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மெணசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அவரை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கூறிய அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பெருமாள், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.