கிருஷ்ணகிரி
சீரான குடிநீர் வழங்கக்கோரிகாலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலால் பரபரப்பு
|ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே சீரான குடிநீர் வழங்ககோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வினியோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் ெகாடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் தங்களுக்கு சீரான குடிநீர் வழங்ககோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சீரான குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.