திருநெல்வேலி
இந்து மக்கள் கட்சியினர் சாலைமறியல்; 30 பேர் கைது
|நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் சாலைமறியல் செய்தனர்.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சந்திப்பு அண்ணாசிலை அருகில் மெயின் ரோட்டில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
உடனடியாக மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவர் ராஜாபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொருளாளர் முத்துபாண்டி, ரவி பாண்டியன், காளிசாமி, சண்முகம், ராம் உள்பட 30 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.