< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்

சுற்றுலா தலமாக விளங்கும் மேகமலையில் சாலைப்பணிகள் முழுமை பெறுமா?

தினத்தந்தி
|
7 Feb 2023 1:00 AM IST

சுற்றுலா தலமாக விளங்கும் மேகமலையில் சாலைப்பணிகள் முழுமை பெறுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள், வானுயர்ந்த மரங்கள் என சோலைவனமாக திகழ்கிறது, மேகமலை. தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான மேகமலை பெயருக்கு ஏற்றாற்போல் மேகங்கள் தரையிறங்கி அங்குள்ள மலையை தவழ்ந்து செல்லும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுவது தனிச்சிறப்பு.

இந்த காட்சியை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலைக்கு வருகின்றனர்.

புதிய தார்சாலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரம் கொண்ட இந்த மலைப்பகுதியில் தான் மேகமலை உள்ளது. இதுதவிர மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. சின்னமனூரை அடுத்த தென்பழனியில் இருந்து ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு மலைப்பாதை உள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது. அதாவது சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு வரை இந்த பாதை நீள்கிறது.

ஆனால் இந்த மலைப்பாதையில் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்தது. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள், தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.86 கோடி செலவில் தென்பழனியில் இருந்து மேகமலை, ஹைவேவிஸ் வரை சாலை அமைக்கப்பட்டது.

பின்னர் 2-ம் கட்டமாக ஹைவேவிசில் இருந்து மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு வரை தார்சாலை அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, சாலை அமைக்கும் பணிகளும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், ஹைவேவிசில் இருந்து மணலாறு வரை தார்சாலை போடப்பட்டது. ஆனால் மணலாறு பகுதியில் இருந்து வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை அமைப்பதற்காக மணல், ஜல்லிக்கற்கள் மலைப்பாதையில் போடப்பட்டது. தார்சாலை அமைக்கும் போது, வனத்துறையினர் அந்த பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முழுமை பெறுமா?

இதனால் இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த கிராமங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அவசர தேவைக்கு மேகமலை, ஹைவேவிஸ் பகுதிகள் மற்றும் சின்னமனூருக்கு ஆபத்தான முறையில் சேதமடைந்த சாலையில் சென்று வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட அந்த பாதையில் செல்ல முடியவில்லை என்று மலைக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சேதமடைந்த சாலையை காரணம் கூறி ஜீப், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களும் இந்த கிராமங்களுக்கு வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மணலாற்றில் இருந்து இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு வரை சாலைப்பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு சாலை பணிகள் நிறைவேறினால் சுற்றுலா வசதியும் இங்கு மேம்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மேகமலை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நடவடிக்கை தேவை

முத்துக்குமார் (விவசாயி, வெண்ணியாறு):- 3 தலைமுறையாக எங்கள் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு மணலாறு பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மலைப்பாதையில் புதிய தார்சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, தற்போது ஜல்லிக்கற்களை கொட்டி வைத்துள்ளனர். பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை காரணம் காட்டி அரசு பஸ்கள் எங்கள் கிராமத்துக்கு வருவதில்லை. இந்த அபாய சாலையில் 2 பேரின் உயிர் பறிபோயுள்ளது. எனவே சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

அற்புதம் (தோட்ட தொழிலாளி, மகாராஜாமெட்டு):- சாலையை சீரமைக்காமல் உள்ளதால் மகாராஜாமெட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வனவிலங்குகள் நடமாடும் பாதையில் நடந்து சென்று வரும் அவல நிலை உள்ளது. இதனால் சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி சமீபத்தில் மலைக்கிராம மக்கள் ஒன்று திரண்டு மலை அடிவாரம் தென்பழனியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இன்று வரை சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்