திருவள்ளூர்
திருத்தணி நகராட்சியில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் நடைபெறும் சாலை விரிவாக்க பணி
|திருத்தணி நகராட்சியில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை மாற்றி அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி-சித்தூர் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்த நிலையில் மேல்திருத்தணி பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்ததால் சாலை குறுகியது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், மேல்திருத்தணி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்வதற்கு, ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் இடத்தில் உள்ள மின்கம்பம் மாற்றி அமைக்காமல் சாலைப் பணிகள் நடக்கிறது. சாலையின் நடுவில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலை பணிகள் முடித்தால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விரிவாக்கம் செய்தும் பயன் இல்லாமல் போகும்.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர் மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி, விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.