< Back
மாநில செய்திகள்
ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி
நீலகிரி
மாநில செய்திகள்

ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி

தினத்தந்தி
|
21 Oct 2023 2:45 AM IST

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை

கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புச்சுவர் கட்டும் பணி, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்யும் பணி, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி, மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, பாலங்கள் பழுது பார்த்தல், சாலைகளை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சேட்டுப்பேட்டை பகுதியில் ரூ.2 கோடி செலவில் மண் சரிவு ஏற்படும் அபாயமுள்ள இடத்தில் சாலை விரிவாக்கம் செய்து, மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் 50 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்கம்

இதேபோல் குஞ்சப்பனை பகுதியில் ரூ.70 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணி மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சங்கர்லால், உதவி பொறியாளர் ரமேஷ் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பருவமழை பெய்யும் போது மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்கும் வகையில் குறுகிய வளைவுகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அத்துடன் சாலையோரங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி மழைநீர் வழிந்தோடி சாலைகள் சேதமடையாமல் தடுக்க வேண்டி, சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, மழைநீர் கால்வாய்கள் புதுப்பிக்கும் பணி, கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பருவமழை காலத்தில் மண்சரிவு ஏற்படுவது குறைவதுடன், போக்குவரத்து தடைபடாமல் இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்