பெரம்பலூர்
சாலை அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு
|சாலை அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை:
போக்குவரத்து துண்டிப்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி பச்சைமலையில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. அந்தப் பகுதியில் பெய்த மழை பெருவெள்ளமாக சாஸ்திரிபுரம் கல்லாற்று ஓடையில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது புதூர் கிராமத்தில் இருந்து சாஸ்திரிபுரம் செல்லும் சாலை சிறிது தூரத்திற்கு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அந்த கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதிகளில் கல்லாற்று ஓடையின் தண்ணீர் அருகே உள்ள சில விவசாயிகளுடைய நிலங்களில் புகுந்தது. இதில் பல விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோள பயிர்கள், மரவள்ளி கிழங்கு, நெல் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கின.
மண் அரிப்பு
மேலும் ஓடையின் ஓரப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரது வயலில் மண் அரிப்பு ஏற்பட்டது. எனவே மலையாளப்பட்டி பகுதியில் வெள்ள சேத பாதிப்புகளை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.