காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
|காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நடைபெற்றது. சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகம் அதிக ஆபத்து உள்ளிட்ட வாசகங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த சாலை பாதுகாப்பு வார தொடக்க விழா நிகழ்ச்சி காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சீபுரம் மாவட்ட மருத்துவர்கள் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் விநாயகம், போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.