< Back
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
திருப்பூர்
மாநில செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
3 July 2023 10:37 PM IST

உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம் இல்லை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக தளி வாய்க்காலை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

குடிநீர் திட்டங்களில் நிலவுகின்ற குளறுபடிகள் காரணமாக சமீபகாலமாக உடுமலை பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு குடிதண்ணீரை பெறுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

சாலை மறியல்

அந்த வகையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் உடுமலை-பழனி பிரதான நெடுஞ்சாலையில் பெரிய கோட்டை பிரிவு அருகே குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கம்பாளையம் ஊராட்சியில் வெஞ்சமடை, முல்லை நகர், கணேசாபுரம், சாதிக் நகர், ஆர்.ஜி.நகர், பி. வி.லே-அவுட் எஸ்.வி.புதூர், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் எஸ்.வி.புரம், ஓலப்பாளையம், வெங்கடேஸ்வரா லே-அவுட், கே.ஜி.புதூர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் உடுமலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் உடுமலை- பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தையொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்