< Back
மாநில செய்திகள்
சாலை ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் முற்றுகை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
23 Feb 2023 2:12 PM IST

பள்ளி செல்லும் சாலையை தனியார் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அரியப்பாக்கம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் வழியில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்னை-ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் பள்ளியை புறக்கணித்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை வசதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்