இது சாலை தானா?...இல்லை உழுது போட்ட வயலா?...
|பெங்களூரு துருபரஹள்ளி மீனாட்சி லே-அவுட்டில் 12 ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் உள்ள சாலை தற்போது பெய்த மழையால் உழுதுபோட்ட வயல் போல் காட்சி அளிக்கிறது.
மகாதேவபுரா:
பெங்களூரு துருபரஹள்ளி மீனாட்சி லே-அவுட்டில் 12 ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் உள்ள சாலை தற்போது பெய்த மழையால் உழுதுபோட்ட வயல் போல் காட்சி அளிக்கிறது.
மீனாட்சி லே-அவுட்
பெங்களூரு மாநகராட்சியில் மகாதேவபுரா மண்டலத்திற்கு உட்பட்டது துருபரஹள்ளி பகுதி. இங்கு மீனாட்சி லே-அவுட் என்ற பகுதி இருக்கிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதிக்கு செல்ல ஒரே ஒரு சாலை தான் உள்ளது. அந்த சாலையில் 50 மீட்டர் தூரம் சாலை மண் ரோடாக காட்சி அளிக்கிறது.
இதனால் லேசான மழை பெய்தாலே அந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும். அந்த சாலையை கடக்க பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். அதுபோல் வாகனத்தில் செல்வோரும் அந்த சாலையை கடக்க சிரமப்பட்டு வருகிறார்கள்.
உழுது போட்ட வயலா?
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மீனாட்சி லே-அவுட்டில் மண் ரோடாக காட்சி அளிக்கும் பகுதி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அதில் வாகனங்கள் சிக்கி திணறி சென்ற வண்ணம் உள்ளது. இதனால் உழுது போட்ட வயல் போல் காட்சி அளிக்கிறது. இது சாலை தானா என்ற எண்ணம் எழுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணா ரெட்டி என்பவர் கூறியதாவது:-
இப்பகுதியில் 12 ஆண்டுகளாக சாலை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில் சாலையின் குறுக்கே ஒருவர் குழி தோண்டி இருந்தார். ஆனால் சரியாக சாலையை மூடவில்லை. இதனால் தற்போது பெய்த மழையால் சுமார் 50 மீட்டர் சாலை தற்போது சேறும், சகதியுமாக மாறி உழுது போட்ட வயல்வெளி போல் ஆகிவிட்டது. இந்த சாலையை கடந்து தான் துருபரஹள்ளி, மகாதேவபுராவுக்கு செல்ல வேண்டும்.
உடனே சீரமைக்க வேண்டும்
இந்த சாலையை கடக்க முடியாமல் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.